09/05/2020
வெட்டிங் பிளானர்ஸ்
நமது தொடரின் நிறைவுப் பகுதியாக திருமண நிகழ்ச்சிகளை ‘ஏ டூ இசட்’ நடத்தித் தரும் திருமண நிகழ்வு மேலாண்மை நிறுவனங்களின் செயல்பாடு பற்றி இந்த இதழில் பார்க்கப் போகிறோம்.
தொடரின் துவக்கத்தில் இருந்து, மணமகன் மற்றும் மணமகளை தேடுவதற்கான இணையதளங்கள், திருமண அழைப்பிதழ்களில் பலவிதமான புதுமைகள் மற்றும் முன்னேற்றங்கள், திருமணத்தை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்படும் திருமண மண்டபங்களின் வசதி, வெளித்தோற்றம், திருமண மண்டபத்திற்கான உள் மற்றும் வெளி அலங்காரங்கள் அதில் செய்யப்படும் கண்கவர் புதுமைகள், திருமணம் செய்துகொள்ளப் போகும் ஜோடிகளுக்கான பலவிதமான அலங்கார மலர் மாலைகள், மணப் பெண்ணிற்கான பல வண்ண அலங்கார ஜடைகள், திருமண உடை தயாரிப்பாளர்கள் திருமண உடைகளில் புகுத்தும் புதுமைகள், மணமக்களுக்கான கல்யாண சிறப்பு அலங்காரம், மெஹந்தி டிசைனில் புதுமைகள், கண்கவரும் ஆரத்தித் தட்டு, சீர் தட்டு தயாரிப்புகள், திருமண நிகழ்வை பதிவு செய்யும் கேன்டிட் போட்டோகிராஃபி மற்றும் வீடியோ கிராஃபியின் தொழில் நுட்பம் சார்ந்த முன்னேற்றங்கள், விருந்தோம்பல் எனப்படும் வரவேற்பில் இருக்கும் பலவிதமான புதுமை நிகழ்வான ஹோஸ்ட் மேனேஜ்மென்ட், திருமணத்தில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள், திருமண விருந்தில் இடம் பெறும் சிறப்பான உணவு வகைகள், ஹனிமூன் பேக்கேஜ் என ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொன்றாக விரிவாகப் பார்த்தோம்.
முன்பெல்லாம் ஒரு வீட்டில் திருமணம் முடிவானால் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய ரத்த உறவுகள் கூடி அமர்ந்து, கல்யாண மண்டபத்தில் துவங்கி, பத்திரிகை, சாப்பாடு, யார் யாரை அழைக்க வேண்டும், திருமணத்தில் என்னவெல்லாம் இடம் பெற வேண்டும், பந்தல் போடுவது, நாதஸ்வரம், கல்யாண சாப்பாட்டுக்கு யாரை நியமிப்பது, மண்டபம், அதன் உள் அலங்காரம், போக்குவரத்து, வரும் உறவினர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடு, தாம்பூலப் பை என அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு, அவர்களுக்குள் யார் யாருக்கு என்னென்ன வேலை, யாரை எதற்கு நியமிப்பது என கலந்துபேசி முடிவு செய்வார்கள். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் திருமணம் தொடர்பான வேலைகளை தேடி கண்டுபிடித்துச் செய்ய யாருக்கும் நேரமில்லை. குடும்ப உறுப்பினர்கள் கூடித் தனித்தனியாகச் செய்யும் சில வேலைகள் திருமண நேர நெருக்கடியில் பெரும்பாலும் சொதப்புவதும் உண்டு. அது திருமணம் செய்யப்போகும் இரு வீட்டாரை மட்டுமின்றி, வந்திருக்கும் உறவுகளுக்குள்ளும் சலசலப்பினை ஏற்படுத்திவிடும்.
திருமண நேர நெருக்கடிகளைத் தவிர்க்கவும், திருமணத்தில் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரின் நெருங்கிய உறவுகளும், நண்பர்களும் முழு மனத்தோடு திருமணத்தில் ஈடுபடவும், திருமணத்திற்கான அத்தனை ‘ஏ டூ இசட்’ வேலைகளையும் ஏற்று, திருமணத்தை சிறப்பாக நடத்தித் தரும் திருமண நிகழ்வு மேலாண்மை நிறுவனங்கள் நிறைய வரத் துவங்கிவிட்டன. அத்தகைய நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் பெறுவதற்காக சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இயங்கி வரும் ஸ்டார் வெட்டிங்ஸ் நிறுவனத்தின் சீனியர் மேலாளராக பணியில் உள்ள சுவாமிநாதனைச் சந்தித்தபோது பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
“பெண்ணையும், மாப்பிள்ளையும் மட்டும் முடிவு செய்துவிட்டு எங்களிடம் வாருங்கள், உங்கள் இல்லத் திருமணம் குறித்த உங்கள் கனவுகளையும், விருப்பத்தையும் நாங்கள் முழு திருப்தியோடு நிறைவேற்றித் தருகிறோம்” என பேசத் துவங்கினார். “திருமணத்திற்கான உங்கள் பட்ஜெட்டை மட்டும் சொல்லிவிட்டால் போதும். உங்கள் எதிர்பார்ப்பை அழகாகவும் மனநிறைவாகவும் நடத்தித் தருவோம். எங்கள் செயல்பாடுகள் அனைத்தும் இணையத்தை வைத்தே இருக்கும். இணையம், முகநூல், டுவிட்டர் இதன் வழியாக நாங்கள் செய்யும் புரோமஷன் வழியாக எங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து என்கொயரி வரும்.
திருமணம் தொடர்பான அனைத்து வேலைகளையும், பந்தி முதல் பந்தல் வரை, வெட்டிங் பிளானரை வாடிக்கையாளர் அணுகி ஒரே இடத்தில் கொடுத்துவிட்டால் திருமண வீட்டாரின் வேலை சுலபமாக முடியும். ஒரே இடத்தில் ஒப்படைக்கும்போது அதில் ஏதேனும் குறை இருந்தால் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தை கேள்வி கேட்கவும் வசதியாக இருக்கும்.மண்டப அலங்காரம், போட்டோகிராஃபி, கேட்டரிங், என்டர்டெய்ன்மென்ட் என திருமணம் தொடர்பான அனைத்தையும் பல பிரிவுகளாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அதில் என்டர் டெய்ன்மென்டில் பலவிதம் உள்ளது. கேட்டரிங்கிலும் பல விதமான மெனுக்கள் உள்ளன.
இந்தியன் மெனு, சவுத் இந்தியன் மெனு, கான்டினென்டல், தந்தூரி என. ரிசார்ட் எனில் வட அவுட்டோர் செட்டப் அதில் இருக்கும். பத்திரிகையில் துவங்கி, மேக்கப் ஆர்டிஸ்ட், நாதஸ்வரம், முகப்பு அலங்காரம், வீட்டுஉள் அலங்காரம், பந்தக்கால் நடல், தேங்காய் பை, தாம்பூலப் பை, ஹனிமூன் பாக்கேஜ் எல்லாம் வெட்டிங் பிளானர்ஸ் வேலையில் அடக்கம். மண்டபத்தை முடிவு செய்வதில் துவங்கி, வந்திருப்போரை பேக் பண்ணி அனுப்புகிறவரை எல்லாமே எங்களிடம் ஒன் பாயின்டில் கிடைக்கும்.
உடை மற்றும் ஆபரணங்கள் தவிர்த்து, ஏழு முதல் எட்டு லட்சம் வரை பட்ஜெட்டாக இருந்தால் ஒரு திருமணத்தை மிகவும் திருப்தியாகப் பண்ணலாம். எங்களிடம் 3 கோடி பட்ஜெட்டில் திருமணத்தை நடத்தியவர்களும் உண்டு. நீங்கள் உங்கள் இல்லத் திருமணத்தை திருமண நிகழ்வு மேலாண்மை நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு முன்பு, அவர்கள் எத்தனை ஆண்டுகள் இந்த தொழிலில் இருக்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்து, இணையத்தில் அவர்
களைப் பற்றி பதிவாகி இருக்கும் மதிப்புரையினை படித்துப் பார்த்து, அவர்கள் பெற்றிருக்கும் ஸ்டார் அந்தஸ்தை அறிந்து நிறுவனத்தை அணுகவேண்டும்” என்கிறார்