26/03/2024
ஹிஜ்ரீ 32ஆம் ஆண்டு.
உடல் நலமின்றி வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்தார் அபூதர். அருகில் அவருடைய மனைவி விம்மியவாறு அமர்ந்திருந்தார்.
“மரணம் அனைவருக்கும் வந்தே தீரும். பிறகு எதற்கு அழுகிறாய்?” என்றார் அபூதர்.
“தனிமையில் யாருமற்ற பாலைவனத்தில் மரணத்தைத் தழுவ இருக்கின்றீர்கள்; உங்களுடைய இறுதிச் சடங்கை நிறைவேற்ற எந்தத் துணையும் உதவியும் இல்லை; உங்களது பிரேதத்தை மூடும் அளவிற்குக்கூட நம்மிடம் துணியில்லை. நான் எப்படி அழாமல் இருக்க முடியும்?”
அதைக் கேட்டு அபூதர் புன்னகைத்தார். “உறுதிகொள். நானும் தோழர்களும் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் எங்களிடம் ‘உங்களுள் ஒருவர் பாலையில் தனிமையில் மரணமடைவார். அவரது இறுதிச் சடங்கு இறை நம்பிக்கையாளர்களின் குழு ஒன்றினால் நடத்தப்படும்’ என்று கூறியதை நான் செவியுற்றேன். அன்று அங்கு என்னுடன் அமர்ந்திருந்த அனைவரும் நகரிலோ, பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதியிலோ மரணமடைந்துவிட்டார்கள், என்னைத் தவிர. இதோ இங்கு நான் அரவமற்ற பாலையில். அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் பொய் உரைத்ததே இல்லை. சென்று பாதையைக் கவனி. அத்தகைய இறை நம்பிக்கையாளர் குழு ஒன்று நிச்சயம் வரும்”
(முஸ்னது அஹ்மத் 21373).
நபியவர்களின் முன்னறிவிப்பை எவ்விதச் சந்தேகமும் இன்றி வெகு நிச்சயமாக நம்பும் மனம் அமைந்திருந்தது சரி. ஆனால் அந்த மரணத் தறுவாயிலும் அத்தகைய கடின சூழலிலும் தமக்கு அதைப் பொருத்தி உவகை கொள்வதற்கு எத்தகைய ஈமானிய உறுதி இருந்திருக்க வேண்டும்?
“எத்தனையோ பாதைகள் கிடக்கின்றன. எதில் என்று நான் சென்று காத்திருப்பேன்?”
அதெல்லாம் தெரியாது. “போ! போய்ப் பார்” என்று மட்டும் வற்புறுத்தினார் அபூதர்.
சிறு மலை முகட்டில் ஏறி நின்று பாதைகள் அனைத்திலும் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்தார் உம்முதர். அங்குச் சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பது, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கிடக்கும் கணவரை கவனிப்பதற்காக வீட்டிற்கு ஓடி வருவது என்று அவருக்குக் கடினமான சோதனை.
தம் மனைவிக்கும் அடிமைக்கும் அபூதர் கட்டளைகள் இட்டார். “நான் இறந்ததும் என்னைக் கழுவுங்கள், துணியால் சுற்றுங்கள், சாலையின் ஓரத்திற்குத் தூக்கிச்சென்று கிடத்துங்கள். கடந்து செல்லும் பயணிகளிடம் ‘இவர் அபூதர்’ என்று தெரிவியுங்கள். அவர்கள் என்னை நல்லடக்கம் புரிவார்கள்.”
அபூதர்ரின் உயிர் பிரிந்தது. அவரைக் கழுவித் துணியால் சுற்றி மூடி, சாலையின் ஓரத்தில் கிடத்திவிட்டு யாரேனும் வருகிறார்களா என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்து, கண்ணீருடன் காத்திருந்தார்கள். சற்று நேரம் கழித்துப் பயணிகளின் கூட்டம் ஒன்று எகிப்திய கழுகுகளைப்போல் தூரத்தில் ஒட்டகங்களில் வருவது தெரிந்தது.
அந்தக் குழுவினர் வெகுதொலைவில் யாரோ சைகை புரிந்து தங்களது பயணக் குழுவின் கவனத்தைக் கவர முயல்வதைக் கவனித்தார்கள். யாருக்கோ அவசர உதவி தேவை என்பது புரிந்து அங்கு விரைந்தது குழு. ஒட்டகச் சவுக்கு அவர்களது கழுத்தில் தொங்க விரைந்து நெருங்கியவர்கள்
“அல்லாஹ்வின் பெண் அடிமையே! என்ன விஷயம்?” என்று விசாரிக்க,
“என் கணவர். இறந்துவிட்டார். நீங்கள் வருவீர்கள். அவரை நல்லடக்கம் செய்ய உதவி புரிவீர்கள் என்று கூறினார். தயவுசெய்து உதவுங்கள்” என்றார் அபூதர்ரின் மனைவி.
“யார் அவர்?”
“அபூதர்.”
“அல்லாஹ்வின் தூதரின் தோழரா?”
“ஆம்.”
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அந்தக் குழுவில் இருந்தார். விஷயத்தைக் கேட்டதும் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அல்லாஹ் அபூதர்ரின்மீது கருணை புரிவானாக. அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார், தனியாளாய் எழுப்பப்படுவார்’ என்று அன்றே அவர்கள் முன்னறிவித்தார்கள்”.
வனாந்தரத்தில் தனிமையில் கிடந்த அபூதர் முஸ்லிம்களின் குழுவினால் சிறப்பாக நல்லடக்கம் செய்யப்பட்டார். எல்லாம் முடிந்து கிளம்பிச் செல்ல இருந்த குழுவை அபூதர்ரின் மகள் தடுத்தார். “என் தந்தை தங்களுக்கு ஸலாம் பகர்ந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு புரிந்த தங்களுக்கு ஓர் ஆட்டை அறுத்துச் சமைத்துத் தரச் சொல்லி எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். உணவு உண்டு செல்லுங்கள்.” அந்தக் குழுவுக்கு உணவு பரிமாறியது அபூதர்ரின் குடும்பம்.
வத்தான் பள்ளத்தாக்கிலிருந்து தனியாய்க் கிளம்பி வந்து, இஸ்லாத்தை ஏற்று, வரலாறு ஒன்றைப் படைத்து, தனியாளாய் நடந்து, தனியாளாய் இறந்து போனார் அபூதர் அல்கிஃபாரி,
ரலியல்லாஹு அன்ஹு.