08/04/2022
செவிலியம் போற்றுதும்
செவிலியம் போற்றுதும்
ஆயபெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின்
தாயெனெபடுவாள்செவிலி ஆகும்
என்கிறது தொல்காப்பியம்.
அருள் என்னும் அன்பின் குழவி
பொருள் என்னும் செல்வ செவிலியால் உண்டு
என்கிறது திருக்குறள்
தமிழ் இலக்கணம் வரையறுத்த தொல்காப்பியம் களவியல் கற்பியல் ஆகிய இரு இயல்களில் செவிலியத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கிறது.
சங்க இலக்கியம் பெண்களை நால்வகை படுத்தினர்
தலைவி, தோழி, நற்றாய், செவிலி
நைட்டிங்கேல் தோன்றும் முன்பே நம் தமிழ் சமூகம் செவிலியத்தை கூறி உள்ளது.
2020ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம்
செவிலியர் ஆண்டாக அறிவித்து உள்ளது
உண்மையில் கொரோனோ செவிலியர் ஆண்டாக தகவமைத்துவிட்டது...
செவிலியர்களை பிரதமர் பாராட்டுகிறார்
மக்கள் கை தட்டுகிறார்கள் கொரோனோ பிரிவில் பணியாற்றி திரும்பும் செவிலியர்களை மக்கள் மாலையிட்டும் பழங்கள் கொடுத்தும் வரவேற்கிறார்கள்.
மே 12 "உலக செவிலியர் தினம் "
உலகமெங்கும் செவிலியர்களால் கொண்டாடப்படும் தினம் .
முதலில் செவிலிய பயிற்சி பள்ளியை ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 1965 முதல் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது .
1854-1856 ஆம் ஆண்டு ரஷ்ய -பேரரசுக்கும் பிரான்ஸ் கூட்டனி நாடுகளுக்கும் ,இங்கிலாந்து அரசு ஓட்டோமான் பேரரசுக்கும் , இடையே க்ரியமனில் நடைபெற்ற போரில் காயம்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக போராடி கொண்டு இருந்த ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு போர் முனைக்கு அனுப்ப பட்டது .
இடைவிடாது இரவு பகல் பாராது அவர்களுக்கு சிகிச்சை அளித்தும் ,ஆறுதல் மொழி பேசியும் ப்ளோரன்ஸ் -நைட்டிங்கேல் தேற்றி வந்தார் .
இரவு நேரங்களில் வலி தாங்காமல் துடித்து கொண்டு இருந்தவர்களை
கையில் ராந்தல் -விளக்கு எடுத்து கொண்டு சுகம் விசாரித்து வலிக்கு மருந்துகளை கொடுத்து மனச்சுமையை போக்கினார் .
இதை கண்ட ராணுவ வீரர்கள் "தங்களை காக்க விண்ணுலகிலிருந்து தேவதை ஒன்று மண்ணுலகிற்கு கையில் விளக்குடன் வந்துள்ளது என்று புகழ்ந்து பாராட்டி உள்ளனர் *A LADY WITH LAMP*""கை விளக்கு ஏந்திய காரிகை " என பெயர் ஏற்பட்டது .
செவிலிய பணி என்பது தொழில் அல்ல மனதிற்கு திருப்தி தரக்கூடிய மனித சேவை.
இந்திய நாட்டில் நிலவி வந்த ஜாதி கொடுமைகள் கல்வி ,பெண்களின் பின் தங்கிய நிலை ,சம உரிமை அற்ற அரசியல் ஆகிய காரணங்களால் செவிலிய துறை பின்தங்கி இருந்தது .
முதலில் இளைஞர்களே செவிலிய பணியில் சேர்ந்தனர் .பின்னர் மகப்பேறு துறையில் பெண்கள் சேர்க்கப்பட்டனர் .
1871 ஆம் ஆண்டு சென்னை பொது மருத்துவமனையில் மகப்பேறு பட்டய படிப்பு 4 மாணவிகளுடன் தொடங்க பட்டது .
தமிழகத்தை பொறுத்த வரை முதலில் நன் சிஸ்டர் களும் , ஆங்கிலோ -இந்தியன் களும் பயிற்சியில் சேர்ந்தனர் .கால போக்கில் தமிழக பெண்களும் செவிலிய பயிற்சியில் சேர்ந்தனர் .
திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமே பயிற்சியில் சேர முடியும் , பயிற்சி முடியும் வரை கட்டாய விடுதி என ஏகப்பட்ட கட்டுபாடுகள் இருப்பினும் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஊரிலும் தொடங்க பட்டு பயிற்சி எடுக்க ஆரம்பித்தனர் .
அன்னை இந்திரா சொன்னது போல் ஒரு செவிலியர் மருத்துவருக்கு உதவியாளர் அல்லது உதவி பொருள் மட்டுமே அல்ல அவள் மருத்துவரின் அவசிய உதவி இல்லாமல் பணியாற்ற கூடிய துறைகள் பல உள்ளன .மேலை நாடுகளில் செவிலிய மயக்குனர் பயிற்சி பெற்று அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுக்கின்றனர் .
ஒரு செவிலியர்க்கு மருத்துவ குழுவில் தனி தன்மை மிகுந்த உரிமை உண்டு .உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு ஒரு மருத்துவமனை இருப்பின் அங்கு ஒரு மலையாள செவிலியர் இருப்பார் .உலகமெங்கும் கேரளா பெண்கள் செவிலிய துறையில் வியாப்பித்து உள்ளனர் .
பெண்கள் மட்டுமே பார்த்து வந்த நிலையில் ஆண்களும் செவிலிய பயிற்சி எடுத்தனர் , சிறைத்துறை ,மனநல காப்பகம் போன்ற பெண்கள் வேலை பார்க்க தயங்கும் இடங்களில் ஆண்கள் செவிலியர்களாக பணி புரிந்தனர் . தமிழகத்தில் 1958 க்கு பிறகு ஆண் செவிலிய பயிற்சி நிறுத்த பட்டது .மீண்டும் செவிலியர்களின் கோரிக்கை ஏற்று 1988 முதல் ஆண் செவிலிய பயிற்சி தொடங்க பட்டது .
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு செவிலிய பயிற்சி முடித்த எனக்கு
கல்கத்தாவின் பிரபல மருத்துவ மனையில் வேலை கிடைத்தது .
ஏகப்பட்ட யோசனைகளுக்கு பிறகே என் பெற்றோர் அங்கு அனுப்பி வைத்தனர் . ஆனால் என்னுடன் ரயிலில் பயணித்த மலையாள் சகோதரிகள் செவிலிய பயிற்சிக்காக அசாமில் உள்ள சிற்றுர்க்கு பயணித்து கொண்டு இருந்தனர் .
இன்றைய உலகில் மிக கொடிய நோய் எது தெரியுமா ? எயட்சோ ,கேன்சரோ இல்லை தன்னை யாரும் கவனிக்க வில்லை என்ற மனசோர்வுதான் உலகின் மிகப்பெரிய நோய் .
ஒரு செவிலியர் என்பவர்
உடல்களையும் மட்டும் அல்ல ,மன காயத்தையும் ஆற்றுபவர் .
ஆண்டவனை எங்கோ தேடுகின்றனர் .வறியவர்களும் ,நோயுற்றவர்களும் ,துன்பபடுபவர்களும் ,ஆறுதல் அடையும் போது
அவர்கள் முகத்தில் தவழும் புன்னகையில் இறைவன் உள்ளார்
என்றார் அன்னை தெரசா .
உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு நொடியும் யாரோ ஒரோ செவிலியர் அந்த புன்னகையை கண்டு கொண்டுதான் இருக்கின்றனர் .
தமிழகத்தை பொறுத்தவரை தென் தமிழக பெண்களே அதிகம் செவிலிய பயிற்சி எடுக்கின்றனர் .திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஒரு காலி இடம் ஏற்பட்டால் மாறுதல் வேண்டி 500 விண்ணப்பங்கள் குவிகின்றது .
2012 ன் கணக்கு படி தமிழகத்தில் 50000 செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது . முதியவர்கள் தனித்து விட பட்ட நிலையில் ஹோம் நர்ஸ் தேவை இன்னும் அதிகமாகும் .
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வெட்ட சொலல்
என்கிறது குறள் நோயாளியின் மனதை அறிந்து, அவன் வெறுக்கும்
சொற்களை தவிர்த்து ,விரும்பும் சொற்களை கூறி அவனை மகிழ்வுற வைப்பதே செவிலியம் .
எதிர்கால செவிலியம் அறிவியல் தொழில் நுட்பத்துடன் ,கணிணி
தொழில் நுட்பமும் இணைந்து செவிலியம் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.
செவிலிய குழுமம் பரிந்துரைத்த செவிலியர்கள் நியமிக்க பட வேண்டும்.
ஒரே சமயத்தில் பல சவால்களையும், இன்னல்களையும் சந்திக்காமல் வெறுப்பு உணர்வு மேலோங்கி நிற்காமல் ,செவிலியம் வாழ வழி வகுக்க வேண்டும் .
அதற்க்கு முறையான நேரங்களில் முறையான பயிற்சி வழங்க வேண்டும் .
செவிலியம் தழைக்கும்! வாழ்க செவிலியம் !
மேலை நாடுகளில் உள்ளது போல்
செவிலியர்களும் (NURSING PRACTITIONER) கொண்டு வர வேண்டும்
கிராமங்களில் சென்று வைத்தியம் பார்க்கும் போது போலி மருத்துவர்கள் குறைவார்கள்...
செவிலியத்தில் பட்ட படிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்
செவிலியர்களுக்கு தொடர் கல்வி அளிக்க வேண்டும்.
கடைசி மனிதன் இருக்கும்வரை
செவிலியம் இருக்கும்.
செவிலியம் போற்றுவோம்
பா_மணிகண்டன்
செவிலிய கண்காணிப்பாளர்
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி & மருத்துவமனை,
திருநெல்வேலி - 11