12/09/2023
காரைக்–கால், செப்.12-
காரைக்காலில் நடந்த திருமண விழா ஒன்றில், மாப்பிள்ளையின் நண்பர்கள் வைத்திருந்த வினோத பேனர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வினோத பேனர்
காரைக்காலில் திருநள்ளாறு சாலை, பிள்ளைத்தெருவாசல் சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டப வாசலில் வினோத பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதாவது, நாளிதழ் வடிவில், மாப்பிள்ளை, பெண் புகைப்படம் பெற்றோர் புகைப்படத்துடன், மணமக்கள் இருவரும் ஒரு வருடம் காதலித்து தற்போது திருமணம் செய்து கொள்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில் ‘காதலித்த குற்றத்திற்காக பெற்றோர்களால் ஆயுள் தண்டனை செய்து வைக்கப்படுகிறது. கறிக் கஞ்சி கிடைக்காதால் கைகலப்பு. நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு’ ஆகிய செய்தி தலைப்புக்கான வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
சமூக வலைதளங்களில் வைரல்
மேலும் மணப்பெண் தேவை என்று 4 இளைஞர்கள் புகைப்படம், பெயர், வயது, படிப்பு, ஊதியத்தை குறிப்பிட்டு, ‘அடுத்த மாப்பிள்ளை நாங்க.. பொண்ணு இருந்தா தாங்க’ என வேண்டுகோள் வேறு விடுக்கப்பட்டிருந்தது.
திருமண விழாவிற்கு வநதிருந்தவர்கள் இந்த பேனரை வினோதமாக பார்த்து ரசித்ததுடன் செல்போன்களில் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதி–விட்டதால் வைரலாகி வருகிறது.